இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் யுத்தம் மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைப் பயங்கரமாகத் தாக்குவது போல, ஈரானும் இஸ்ரேலையும், ஈரானுக்கு அண்மையில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் பயங்கரமாகத் தாக்கி வருகின்றது. அமெரிக்கா ஈரானில் உள்ள பள்ளி ஒன்றைத் தாக்கியதன் மூலம் 150-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இறந்தது உலக மக்களிடையே பல எதிர்ப்புகளை அமெரிக்கா சம்பாதித்துள்ளது. அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஒரு மாதத்திற்கு மேல் யுத்தம் செய்யும் பண்டைய பாரசீகப் பேரரசான ஈரானின் இராணுவப் பலம் எப்படிப்பட்டது என்று பார்ப்போம்.
1. இரண்டு பிரிவுகளாகச் செயல்படும் ஈரானின் இராணுவக் கட்டமைப்பு
ஈரான் நாட்டில் 9 கோடியே 24 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். எதிரி நாடுகளிடமிருந்து ஈரான் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள தரைப்படையை Artesh (ஆர்டேஷ்) மற்றும் IRGC என்று இரண்டு அமைப்புகளாக உருவாக்கியுள்ளது.

தேசிய இராணுவம் (Artesh):
இது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரம்பரிய அமைப்பு. இதில் சுமார் 3,50,000 வீரர்கள் உள்ளனர். இதில் தரைப்படை, கடற்படை, விமானப்படை, வான் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. கடற்படையில் 18,000 வீரர்கள், விமானப்படையில் 37,000 வீரர்கள், வான் பாதுகாப்புப் படையில் 15,000 வீரர்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC):
1979-இல் ருஹுல்லா கொமேனியால் நிறுவப்பட்ட காவல்படையாகும். இதில் சுமார் 1,90,000 வீரர்கள் தற்போது உள்ளனர். ஈரானிய அரசியல் அமைப்பைப் பாதுகாக்கும் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பம், வெளிநாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பு.
மீதமுள்ள படை (Reserve Force):
தேவைப்படும் போது அழைக்கப்படும் இராணுவப் பயிற்சி பெற்ற நவீன ஆயுதங்களைக் கையாளக்கூடியவர்கள். போர் ஏற்படும் போது குறுகிய காலத்தில் முன்னணிப் படைகளுடன் இணைக்கப்படுவார்கள். இதில் சுமார் 3,50,000 வீரர்கள் உள்ளனர்.
பெசிஜ் (Basij) துணை இராணுவம்:
IRGC-இன் கீழ் வரும் துணை இராணுவம். அவசர காலத்தில் பொதுமக்களை அணிதிரட்டும் தன்னார்வலர்களை உள்ளடக்கியது. ஈரானால் 6,00,000 முதல் 10 லட்சம் வரை வீரர்களைத் திரட்ட முடியும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2. ஈரானின் இராணுவப் பலம்: 2026-இல் ஈரானியப் படைகளின் படை நிலவரம்
ஈரான் இராணுவ வீரர்களின் பலத்தைப் போலவே, தனது தரைப்படைக்காகப் பல கவச வாகனங்களைத் தயாரித்தும் உள்ளனர். ஈரானிடம் பெரிய பீரங்கிப் படையும் உள்ளது மற்றும் போர் டாங்கிகளையும் தன்னிடம் வைத்துள்ளது.
முக்கிய போர் டாங்கிகள்:
ஈரானின் முக்கிய நவீன போர் டாங்க் கார்ரார் (Karrar) ஆகும். இது இரகசியத் தொழில்நுட்ப அமைப்புகளைக் கொண்டது. ஈரானிடம் சுமார் 800-க்கும் மேற்பட்ட நவீன டாங்கிகள் உள்ளன. சுல்பிகர் (Zulfiqar) டாங்க் ஈரானிய வடிவமைப்பில் உருவான போர் டாங்க் ஆகும்; இது மூன்றாம் தலைமுறையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. சுல்பிகர் 1, 2, 3 என ஈரானிடம் சுமார் 2,800 போர் டாங்கிகள் உள்ளன.
கவச வாகனங்கள்:
ஈரானிய வீரர்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்ல போராக் (Boragh) என்ற கவசப் பணியாளர் கேரியர் (APC) பயன்படுத்தப்படுகின்றது. ராக்ஷ் (Rakhsh) என்றழைக்கப்படும் நான்கு சக்கர கவச வாகனம் ஈரானின் முக்கிய எல்லைகளைப் பாதுகாக்கவும் மற்றும் ரோந்துப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஈரானிடம் உள்ள கவச வாகனங்கள் என்று பார்த்தால், சுமார் 2,800-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் உள்ளன.
பீரங்கிப் படை:
ஈரானின் தரைப்படைக்கு வலுசேர்க்கும் ஒரு நகரும் பீரங்கி ராட் (Raad) ஆகும். இதில் ராட்-1, ராட்-2 என இரண்டு வகைகள் உள்ளன. இது ஒரு கவச வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு இடத்தில் தாக்குதல் நடத்திவிட்டு இன்னொரு இடத்திற்கு உடனடியாக நகர முடியும். இதனால் ஒரு நிமிடத்திற்கு 4 முதல் 5 குண்டுகளை ஏவும் திறன் கொண்டது; 27 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடியது. ஈரானிடம் சுமார் 2,500 இழுத்துச் செல்லக்கூடிய பீரங்கிகளும், 600 சுய இயக்கப் பீரங்கிகளும் உள்ளன.
வான் பாதுகாப்பு அமைப்புகள்:
ஈரானின் உள்நாட்டுத் தயாரிப்பிலான பாவர்-373 (Bavar-373) வான் பாதுகாப்பு அமைப்பு, ஒரே நேரத்தில் 100 இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. அவற்றில் 6 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஈரானிடம் 40 முதல் 50 வரை பாவர்-373 வான் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது.
ஈரானின் இராணுவப் பலம் என்று பார்க்கும்போது, சயத்-4பி (Sayyad-4B) வான் பாதுகாப்பு அமைப்பு தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இது புதிய வகை திட எரிபொருள் இயந்திரத்தைக் கொண்டது; இதனால் அதிவேகத்தைக் கொண்டது. இதில் மேம்பட்ட ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும்.
சயத்-4பி (Sayyad-4B) 300 கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. வான்வெளியில் சுமார் 32 கிலோமீட்டர் உயரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதால், இவை போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள், தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாவர்-373-ஐ நவீனப்படுத்தி வடிவமைக்கப்பட்டதாகும்.
ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, சயத்-4பி சோதனை செய்யப்படும்போது 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இதன் ரேடார் கண்டறிந்து, 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போது அந்த இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக உறுதி செய்யப்பட்டது.
போர் விமானங்களின் நிலை:
ஈரானிய வான்படை என்று பார்த்தால், 2026-ஆம் ஆண்டு தற்போதைய இராணுவ ஆய்வுகள் மற்றும் தரவுகளின்படி 500 முதல் 550 வரையிலான விமானங்கள் உள்ளன. ஈரான் பொருளாதாரத் தடைக்கு முன் வாங்கிய அமெரிக்க விமானங்களான F-14-ஐக் கைவிடாமல், அவற்றைத் உள்நாட்டிலேயே பராமரித்துத் தொடர்ந்து இயக்கி வருகின்றது. ஈரானிடம் சுமார் 40-45 F-14 விமானங்கள் உள்ளன. ரஷ்யாவிடமிருந்து 2024-2025 காலப்பகுதியில் பெற்ற Su-35 பல்துறை போர் விமானம் இதில் சுமார் 24 உள்ளது; இது ரேடார்களுக்குச் சவால் விடக்கூடியது.
ரஷ்யத் தயாரிப்பான MiG-29-இல் 35 முதல் 40 விமானங்களும், F-4 Phantom II தாக்குதல் விமானம் 60-65-உம், F-5 Tiger II இலகு ரக போர் விமானம் 50-55 வரையும், Mirage F1 போர் விமானம் 10-15 வரையும் உள்ளன. கௌசர் (Kowsar) இது ஈரானிய நான்காம் தலைமுறை போர் விமானமாகும்; இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இது அமெரிக்க விமானமான F-5 இன் தோற்றத்தை ஒத்தது, இவை 15-20 வரை உள்ளன. Saeqeh இதுவும் ஈரானின் உள்நாட்டுப் போர் விமானமாகும்; இது இரட்டை வால் அமைப்பைக் கொண்டது, இதனால் சுழற்சித் திறன் அதிகமாகக் காணப்படுகிறது. இது உள்நாட்டு ஏவுகணை மற்றும் குண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் உடையது, இத்தகைய விமானங்கள் 25-30 வரை ஈரானிடம் உள்ளன.
ஈரான் தனது விமானங்களைப் போர்க்களங்களில் பாதுகாக்க ஈகிள் 44 (Eagle 44) போன்ற நிலத்தடி வான்படைத் தளங்களை அமைத்துள்ளது. இது ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் மலைக்கு அடியில் மிக ஆழமாகக் கட்டப்பட்டுள்ளது. இது ஹார்முஸ் நீரிணைப்பிற்கு அருகாமையில் உள்ளதால் ஈரானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் ஒன்றாகும்.
3. உலகையே அச்சுறுத்தும் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைப் பலம்
ஈரானின் இராணுவப் பலம் என்று பார்க்கும்போது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கூறலாம். ஈரான் ட்ரோன்களின் வல்லரசாக உருவெடுத்துள்ளது எனலாம்; நவீன ஏவுகணைத் தொழில்நுட்பத்திலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனைப் பாதுகாக்கவும் நிலத்தடி ஏவுகணை நகரங்களை அமைத்துள்ளது.
ட்ரோன் (Drone) தொழில்நுட்பம்:
தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களான Shahed-136/131, 2,500 கிலோமீட்டர் தூரம் வரை வான் பாதுகாப்பு அமைப்புகளைத் திறனழித்து ஊடுருவி வந்து தாக்கக்கூடியவை. Shahed-149 Gaza, இது ஈரானின் மிகப்பெரிய ட்ரோன்களில் ஒன்று; இது 35 மணிநேரம் பறந்து செல்லக்கூடியது மற்றும் 13 குண்டுகளைச் சுமந்து செல்லும் வல்லமையுடையது. Shahed-238 என்பது Shahed-136 இன் நவீன ஜெட் பதிப்பாகும்; இது மணிக்கு சுமார் 500 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய மிக வேகமான ஈரானிய ட்ரோன் ஆகும்.
ஒரு Shahed ட்ரோனின் விலை 20,000 டாலர் மட்டுமே, ஆனால் அதனை அழிக்கப் பயன்படும் ஏவுகணைகளின் விலை மில்லியன் கணக்கான டாலர்களாகும்; இது ஈரானுக்குப் பெரிய பலமாக உள்ளது. ஈரானிடம் 3,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் உள்ளன. ஒரு மாதத்தில் சுமார் 50 முதல் 100 ட்ரோன்களை உற்பத்தி செய்கின்றனர்.
ஏவுகணை (Missile) சக்தி:
மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய அதிநவீன ஏவுகணைகளை ஈரான் கொண்டுள்ளது. பாத்தாஹ்-2 (Fattah-2) இது ஒரு ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் (Hypersonic Glide Vehicle) ரகத்தைச் சேர்ந்தது. இதனுடைய வேகம் ஒலியை விட 15 மடங்கு வேகமானது (Mach 15); மணிக்கு சுமார் 18,500 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. வான் பாதுகாப்பு அமைப்புகள் நெருங்கும்போது தனது பாதையைத் திடீரென்று மாற்றக்கூடிய அதிநவீன ஏவுகணையாகும். இது 1,400 கி.மீ வரை செல்லக்கூடியது.

கெய்பர் ஷேகன் (Kheibar Shekan), இது திட எரிபொருளைப் பயன்படுத்துவதால் குறுகிய நேரத்தில் ஏவுவதற்குத் தயார் செய்யப்படக்கூடியது; இது 1,400 கி.மீ தூரம் வரை செல்லக்கூடியது. செஜில் (Sejjil) ஏவுகணை ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணையாகும்; இது 2,500 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடியது. ஈரானிடம் 3,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளன.
நிலத்தடி ஏவுகணை நகரங்கள்:
ஈரான் தனது ஏவுகணைகளைப் பாதுகாப்பாக வைக்க மலைகளுக்கு அடியில் 500 மீட்டர் ஆழத்தில் கடினமான பாறைகளைக் குடைந்து நகரங்களைப் போன்ற கட்டமைப்புகளை அமைத்துள்ளது. மின்காந்தக் கவசங்களின் மூலம் ரேடார்களிடமிருந்து தப்பித்து, அதிர்வுகளைத் தாங்கும் வகையில் இவை அமைந்துள்ளன.
ஈரான் யாஸ்டு (Yazd) மாகாணம், கொர்ரமாபாத் (Khorramabad), தப்ரிஸ் (Tabriz) மற்றும் கெர்மான்ஷா (Kermanshah) போன்ற இடங்களில் இத்தகைய ஏவுகணை நகரங்களை அமைத்துள்ளது. இந்தச் சுரங்கங்களில் ஏவுகணை உற்பத்தி செய்யவும், எரிபொருள் நிரப்பவும், அங்கிருந்து நேரடியாக ஏவவும் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இவை பல கிலோமீட்டர் நீளமுள்ள பலவழிகளுள்ள சுரங்கப்பாதைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நிலத்தடி நகரங்களாகும். இதனால் ‘பங்கர் பிளாஸ்டர்’ (Bunker Buster) குண்டுகளால் இவற்றை அழிப்பது கடினமாகும்.
4. ஈரானின் கடற்படைப் பலம் மற்றும் கொரில்லா போர் முறை
ஈரான் தனது கடற்படையை இரண்டு பிரிவுகளாகக் கையாள்கிறது. Artesh கடற்படை, இது பாரம்பரிய பெரிய கப்பல்களைக் கொண்ட படை; IRGC கடற்படை, இது பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ட்ரோன்கள் மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகள் மூலம் கொரில்லா போர் முறையில் தாக்குதலை நடத்தும் படையாகும்.
முக்கிய போர்க்கப்பல்கள்:
ஈரான் பல போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது. ஜமாரான் (IRIS Jamaran) இது ஈரானின் போர்க்கப்பலாகும். சஹான்ட் (IRIS Sahand), தனா (IRIS Dena) இவை ஈரானின் நவீன போர்க்கப்பல்களாகும். கட்டமரன் கோர்வெட்டுகள் (Catamaran Corvettes) இதுவும் நவீன ரக போர்க்கப்பலாகும். ஈரானிடம் 30-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. 2026 மார்ச் மாதம் 9 முதல் 11 கப்பல்கள் வரை அமெரிக்காவால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
ஈரானின் உண்மையான பலம்: கொசுப் படை (Mosquito Fleet)
ஈரானின் உண்மையான பலம் ‘கொசுப் படை’ எனப்படக்கூடிய ஆயிரக்கணக்கான சிறிய படகுகள் ஆகும். இதில் அஷுரா (Ashura), தாரிக் (Tariq) மற்றும் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் சுல்பிகர் (Zulfiqar) ரகப் படகுகள் முக்கியமானவை. ஈரானிடம் சுமார் 3,000 சிறிய அதிவேகப் படகுகள் உள்ளன. இவை மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை.
நீர்மூழ்கிக் கப்பல்கள்:
ஈரானின் நீர்மூழ்கிக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவின் ஆழம் குறைந்த பகுதிகளில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த வல்லவை. கிலோ வகுப்பு (Kilo-class) நீர்மூழ்கிக் கப்பல், இது ரஷ்யத் தயாரிப்பு. கதிர் மற்றும் பதே (Ghadir and Fateh) இவை ஈரானில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக மற்றும் நடுத்தர ரக நீர்மூழ்கிக் கப்பல்களாகும். ஈரானிடம் 20 முதல் 24 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
5. பிராந்திய செல்வாக்கு மற்றும் ஈரானின் போர் உத்திகள்
ஈரான் தனது பிராந்திய நட்பு வட்டாரங்களை முன்னிறுத்திப் போரிடுகிறது. லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா (Hezbollah) இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி, ஈரானுக்கு எதிரான அழுத்தத்தைக் குறைக்கிறது. 2026 ஏப்ரல் 8 அன்று இஸ்ரேல் லெபனானில் தீவிரத் தாக்குதல் மேற்கொண்டதால் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; இது இஸ்ரேல் மீது பெரிய எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
தாக்குதல் உத்திகள்:
விலையுயர்ந்த ஒரு பெரிய ஏவுகணையை அனுப்புவதற்குப் பதிலாக, நூற்றுக்கணக்கான மலிவான Shahad ட்ரோன்களையும் அதிவேக சிறிய படகுகளையும் ஒரே நேரத்தில் அனுப்பி எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்பைத் திறனழிப்பது ஈரானின் பாணியாகும். ஈரானியக் கப்பல்கள் தங்களின் நிலையை மறைக்க AIS கருவிகளை அணைத்துவிட்டுப் பயணிப்பது இவர்களின் உத்தியாகும். எண்ணெய் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் போன்றவற்றைச் செலுத்தும்போது எதிரிகள் தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
சைபர் தாக்குதல் மற்றும் மக்கள் படை:
2026 ஏப்ரல் மாதத் தரவுகளின்படி, ஈரானிய ஹேக்கர்கள் அமெரிக்காவின் நீர் விநியோகம், மின்சாரக் கட்டமைப்புக்களின் கட்டுப்பாட்டு அமைப்புகளை ஊடுருவிச் சிதைக்க முற்பட்டனர். ஈரான் போர்க்களத்தில் போரிடப் பல மில்லியன் தன்னார்வலர்களைத் திரட்டி, ஒரு பன்முகத் தற்காப்பு வளையத்தை உருவாக்கக்கூடிய வல்லமையுடையது.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் பொருளாதார அழுத்தம்:
ஈரான் ஹார்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எண்ணெய் விலையை உயர்த்தி அழுத்தங்களை மேற்கொள்வதன் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. இதனால் உலக நாடுகளின் அழுத்தங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சந்திக்கின்றன. 2026 ஏப்ரல் 8 பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்கள் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதாக அறிவித்துவிட்டு, லெபனானிலும் ஈரானிலும் தாக்குதல் நடத்தியதால் ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடிவிட்டது.

அண்மைய யுத்தங்களைப் பார்க்கும்போது ஈரான் யுத்தத்தை விரும்பவில்லை; அமெரிக்காவோ இஸ்ரேலோ தாக்குதல் நடத்தும்போது மட்டுமே பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். 2026 தரவுகளின்படி ஈரான் உலக அளவில் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது. ஈரானின் பலம் குறியீடு 0.3199 ஆகும்; இது 0.0000-ஐ நெருங்கும்போது அந்த நாடு அதிக பலம் கொண்டதாகக் கருதப்படும்.
ஆயுதங்களை அடுக்கி வைப்பது அழிவிற்காக அல்ல, தன் தேசத்தின் அமைதியை அரணாக நின்று காப்பதற்கே என்பதை ஈரான் உலகிற்கு உணர்த்தி நிற்கிறது. பாரசீகத்தின் இந்த வலிமை என்பது வெறும் ஏவுகணைகளின் சீற்றம் மட்டுமல்ல; அது தன் மண்ணையும் மக்களையும் காக்கத் துடிக்கும் ஓர் இனத்தின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை. உலக நாடுகளின் வரிசையில் போர் விரும்பாத ஒரு தேசமாக, ஆனால் போருக்குப் அஞ்சாத ஒரு சக்தியாக ஈரான் இன்று நிமிர்ந்து நிற்கிறது.
ஈரானின் இராணுவப் பலம் FAQ:
1. ஈரானின் இராணுவக் கட்டமைப்பு எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
ஈரான் இராணுவம் இரண்டு முக்கிய பிரிவுகளைக் கொண்டது: ஒன்று நாட்டின் எல்லைகளைக் காக்கும் தேசிய இராணுவம் (Artesh), மற்றொன்று அரசியல் அமைப்பையும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் கவனிக்கும் புரட்சிகர காவல்படை (IRGC).
2. ஈரானின் ஏவுகணை வலிமை எத்தகையது?
மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய ஏவுகணை கையிருப்பை ஈரான் கொண்டுள்ளது. குறிப்பாக ஒலியை விட 15 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய பத்தாஹ்-2 (Fattah-2) போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் 2,500 கி.மீ தூரம் வரை பாயும் ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன.
3. ‘ஏவுகணை நகரங்கள்’ என்றால் என்ன?
எதிரி நாடுகளின் ரேடார்களுக்கும் குண்டுகளுக்கும் தப்புவதற்காக, மலைகளுக்கு அடியில் 500 மீட்டர் ஆழத்தில் ஈரான் உருவாக்கியுள்ள நிலத்தடி இராணுவத் தளங்களே ஏவுகணை நகரங்கள் எனப்படுகின்றன.
4. ஈரானின் ட்ரோன் (Drone) தொழில்நுட்பம் ஏன் உலகால் கவனிக்கப்படுகிறது?
ஈரான் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஷாஹெட் (Shahed) போன்ற தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது. ஒரு ட்ரோனின் விலை குறைவு, ஆனால் அதனை அழிக்க எதிரிகள் பயன்படுத்தும் ஏவுகணைகளின் விலை பல மில்லியன் டாலர்களாக இருப்பது ஈரானுக்குப் பெரும் சாதகமாகும்.
5. ஈரானின் கடற்படை வியூகம் என்ன?
ஈரான் ‘கொசுப் படை’ (Mosquito Fleet) எனப்படும் ஆயிரக்கணக்கான அதிவேகச் சிறிய படகுகளைப் பயன்படுத்துகிறது. இவை பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணை போன்ற பகுதிகளில் கொரில்லா போர் முறையில் பெரிய கப்பல்களைச் சூழ்ந்து தாக்கும் திறன் கொண்டவை.
6. உலக இராணுவ தரவரிசையில் ஈரானின் இடம் என்ன?
சர்வதேச இராணுவ ஆய்வுத் தரவுகளின்படி (Global Firepower), ஈரான் உலக அளவில் முதல் 20 வலிமையான நாடுகளின் பட்டியலில் (சுமார் 16-வது இடம்) தொடர்ந்து நீடிக்கிறது.



