சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு. ஒரு காலத்தில் வெறும் மீன்பிடி கிராமமாக இருந்த இந்தப் பிரதேசம், இன்று உலகின் செல்வந்த நாடாகத் திகழ்கின்றது. 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி மதிய நேரம், லீ குவான் இயூ அவர்கள் குரல் நடுங்க, சில நிமிடங்கள் பேச முடியாமல் கண்கலங்கிய வண்ணம், “மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்து தனி நாடாக மாறுகின்றது” என்று அறிவிக்கிறார்.
சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து 1959-லேயே உள்நாட்டு சுயாட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்தது. எனினும், சிங்கப்பூரின் இனரீதியான மோதல்கள் மலேசியா முழுவதும் பரவிவிடுமோ என்று மலேசிய அரசு அஞ்சியது. அதேநேரம், லீ குவான் இயூ “மலேசியர்களுக்கான மலேசியா” என்ற முழக்கத்தை முன்வைத்ததால், அவரது செல்வாக்கும் மக்கள் செயல் கட்சியின் (PAP) வளர்ச்சியும் அதிகரித்தது. இது மலேசிய ஆளுங்கட்சித் தலைவர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் மலேசியாவின் ஒரு பகுதியாக நீடித்தால், எதிர்காலத்தில் சீன இனத்தைச் சேர்ந்த லீ குவான் இயூ மலேசியப் பிரதமராகும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் அவர்கள் கருதினர். மேலும், சிங்கப்பூர் ஆசியாவின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கியதால், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியில் அதிக வருமானம் ஈட்டியது. இதன் காரணமாக, மலேசியா முதலில் 40 சதவீத வரியைக் கேட்டு, பின்னர் அதனை 60 சதவீதமாக உயர்த்த முயன்றது. இது இரு தரப்பினருக்கும் இடையே கடும் விரிசலை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் மலேசியக் கூட்டமைப்பிலிருந்து சிங்கப்பூரை நீக்கினார். இயற்கை வளங்கள் ஏதுமற்ற, குடிப்பதற்குத் தண்ணீர் கூட மலேசியாவை நம்பியிருந்த ஒரு சின்னஞ்சிறு தீவு, எப்படித் தப்பிப் பிழைக்கும் என்ற கவலையில் லீ குவான் இயூ கண்ணீருடன் சிங்கப்பூரின் தனி நாட்டுப் பிரகடனத்தை அறிவித்தார்.
அன்று கண்ணீருடன் வெளியேறிய அதே சிங்கப்பூர், இன்று உலக வரைபடத்தில் பொருளாதாரத்தில் மிக வலிமையான நாடாகத் திகழ்கிறது. லீ குவான் இயூவின் அன்றைய கண்ணீரே சிங்கப்பூரின் அசுர வளர்ச்சிக்குக் காரணமாக மாறியது. இனி, சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் எப்படி அமைந்தது என்று காண்போம்.
சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம்: லீ குவான் இயூவின் தொலைநோக்கு

லீ குவான் இயூ மலேசியாவிலிருந்து பிரிந்த உடனேயே, சிங்கப்பூர் ஒரு தனித்து இயங்கும் நாடாகச் சர்வதேச அங்கீகாரம் பெற, வெளியுறவு அமைச்சர் எஸ். ராஜரத்தினம் ஊடாக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்குச் சிங்கப்பூரை உறுப்பினராகச் சேர்க்கக் கோரி கடிதத்தை அனுப்பினார். 1965 செப்டம்பர் 21-ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை சிங்கப்பூரை உறுப்பினராக ஏற்றுக்கொண்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
சிங்கப்பூர் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, அதற்கென்று சொந்த ராணுவம் இல்லாததாலும் மக்கள் தொகை குறைவாக இருந்ததாலும், 1967-இல் தேசிய சேவைச் சட்டம் (National Service) கொண்டு வரப்பட்டது. 18 வயது பூர்த்தியானவுடன் கட்டாயம் தேசிய சேவையில் ஈடுபட வேண்டும். குறிப்பிட்ட காலம் ராணுவத்திலோ அல்லது தீயணைப்புத் துறையிலோ அல்லது காவல் துறையிலோ பணியாற்ற வேண்டும். தற்போதும் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. 18 வயது பூர்த்தியான ஆண் குடிமகன் 2 வருடங்கள் முழுநேர சேவையில் ஈடுபட வேண்டும்.
ஊழல் தடுப்பு விசாரணைப் பணியகத்திற்கு (CPIB) முழு அதிகாரத்தை வழங்கினார். எத்தகைய உயர் பதவியில் இருப்பவர் ஊழல் செய்தாலும் தப்பிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கினார். 1966-இல் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற ‘சிங்கப்பூர் சட்டம் 1966’ போன்ற கடுமையான சட்டங்களை அமல்படுத்தினார்.
சிங்கப்பூர் முழுமையாகச் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, 1961-ஆம் ஆண்டிலேயே பொருளாதார வளர்ச்சி வாரியம் (EDB) அமைத்து சிங்கப்பூரில் புதிய தொழில் நிறுவனங்களை ஆரம்பித்தார். அந்த நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம், அந்த நிறுவனத்திற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரி விலக்கு அளிப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை லீ குவான் இயூ ஈர்த்தார்.
சதுப்பு நிலமாக இருந்த ஜூரோங் (Jurong) பகுதியை 1961-இல் லீ குவான் இயூ தொழிற்சாலை மையமாக மாற்றினார். இதனால் 1962-இல் NISM நிறுவனம் சிங்கப்பூரில் முதல் தொழிற்சாலையை அமைத்து இரும்பு மற்றும் கம்பிகளை உற்பத்தி செய்தது.
ஜப்பானிய IHI நிறுவனத்துடன் இணைந்து 1963-இல் ஜூரோங் கப்பல் கட்டும் தளம் (Jurong Shipyard) தொடங்கப்பட்டு, உலகின் முன்னணி கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் மையமாக மாறியது. ஜூரோங் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாயின. தற்போது இப்பகுதியில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் பெருகியுள்ளன. ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையமும் இங்கு அமைந்துள்ளது.
1950-களில் சிங்கப்பூரில் கடுமையான வீட்டு வசதி தட்டுப்பாடு இருந்ததால் மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். லீ குவான் இயூ தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் 1960-இல் வீடமைப்பு மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தரமான வீடுகளை மலிவான விலையில் வழங்கினார்.
சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டாயமாகப் பிடித்துச் சேமிக்கும் முறையான மத்திய சேம நிதி (CPF) மூலம், HDB வீட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் வீடுகளின் மாதாந்திரத் தவணைப் பணத்தைக் கட்டும் வசதியை 1968-இல் கொண்டு வந்தார். இதனால் 1990-களில் 87 சதவீத மக்கள் HDB வீடுகளில் வசித்தனர். ஏழை மக்களிடமும் அரசாங்கத்தின் திட்டங்கள் போய் சேர்ந்ததால் சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் ஆரம்பமானது.
லீ குவான் இயூ 1966-இல் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில மொழியும் தாய்மொழியும் பயிற்றுவிக்கப்படும் ‘இருமொழிக் கொள்கையை’ கட்டாயமாக்கினார். 1987-இல் ஆங்கிலம் பயிற்று மொழியாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. தாய்மொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டது. அறிவியலுக்கும் வணிகத்திற்கும் பொதுவான மொழியாக ஆங்கிலம் அவசியம் என்பதாலும், இன ஒற்றுமைக்காகவும் இம்மாற்றம் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் பல்லின சமூகத்தினர் வாழ்வதால் இனங்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படாமல் இருக்கக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தார் லீ குவான் இயூ. மத அல்லது இன வெறுப்பைத் தூண்டும் நபர்களை விசாரணை இன்றி கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
1968-இல் பொது சுகாதாரச் சட்டத்தின் மூலம் பொது இடங்களில் குப்பை போடுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. வீடுகள், கடைகளைச் சுத்தமாக வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டது. கழிவு முறையை முறையாக அகற்றுவதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன.
‘பசுமை சிங்கப்பூர்’ திட்டம் மற்றும் நகரத்தை அழகுபடுத்துவதற்காகப் ‘பூங்காக்கள் மற்றும் மரங்கள் வளர்ப்புத் துறை’ என்று 1973-இல் தனித்துறை உருவாக்கப்பட்டது. தூய்மையைப் பேணத் தவறுபவர்களுக்கு அபராதங்களும் தண்டனைகளும் வழங்கப்பட்டதால், மக்கள் கட்டுப்பாடாக இருந்தனர். இதனால் சிங்கப்பூர் தூய்மையான நாடாக மாறியது.
சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம்: சாதனை சரித்திரம்
சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் சாதாரணத் தீவிலிருந்து உலகின் தலைசிறந்த வர்த்தக மையமாக மாறியது, லீ குவான் இயூவின் மிகச்சிறந்த திட்டமிடலுக்கு ஒரு சான்றாகும். இயற்கை வளங்கள் துளியும் இல்லாத ஒரு நாடு, தனது அமைவிடத்தைச் சாதகமாகப் பயன்படுத்தியதால் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அதன் அமைவிடம் முக்கியக் காரணம் என்றாலும், லீ குவான் இயூ அதனைப் பயன்படுத்திக்கொண்ட விதம் தனிச்சிறப்பு. மலாக்கா நீரிணை தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள மிக முக்கியமான கடல் வழிப்பாதை.
இது மேற்கே இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிற்கும், கிழக்கே மலேசியத் தீவகற்பத்திற்கும் தென்கோடி முனையில் சிங்கப்பூரும் அமைந்துள்ளது. மலாக்கா நீரிணை சிங்கப்பூருக்கு அருகே பிலிப்ஸ் கால்வாய் அருகே 2.8 கி.மீ-ஆகச் சுருங்குகிறது.
மலாக்கா நீரிணை வடக்கே இந்தியப் பெருங்கடலையும் தென்கிழக்கே தென் சீனக் கடலையும் இணைக்கிறது. மலாக்கா நீரிணையின் ஊடாக ஆண்டுக்குச் சுமார் 94,000-இற்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்கின்றன. பெரும்பாலான கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்தில் தங்கிச் செல்கின்றன. மலாக்கா நீரிணை மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் கிழக்காசியா இடையேயான வர்த்தகத்திற்கு இன்றியமையாதது.
மலாக்கா நீரிணையின் ஊடாக உலக வர்த்தகக் கப்பல்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு செல்கின்றன. 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 23.2 மில்லியன் பேரல் எண்ணெய் மலாக்கா நீரிணையின் ஊடாகவே சென்றது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 29 சதவீதமாகும். இந்த நீர்ப்பாதையில் நாளொன்றுக்குச் சுமார் 260 மில்லியன் கன மீட்டர் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவும் செல்கின்றது.

மலாக்கா நீரிணை, ஹார்முஸ் நீரிணையிலிருந்து (Strait of Hormuz) வேறுபட்டது. மலாக்கா நீரிணையின் ஊடாக உலகின் சுமார் 25 சதவீத கார் வர்த்தகம் இந்த வழியாகவே செல்கிறது. மின்னணுப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் இயந்திரங்களும் இந்த வழியின் ஊடாகவே செல்கின்றன. மலாக்கா நீரிணை அளவுக்கு ஹார்முஸ் நீரிணை சரக்குப் பரிமாற்ற மையமாக இல்லை.
2025-ஆம் ஆண்டு மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீர்நிலைகளில் 108 கடல் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான உயர்ந்த அளவாகும். அதிகரித்த கொள்ளைச் சம்பவங்களினால் சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் மலேசியாவுடன் இணைந்து கடல்சார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. 2025-இன் பிற்பகுதியில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, இந்தச் சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளன.
லீ குவான் இயூ மலாக்கா நீரிணையைச் சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணமாக மாற்றப் பல உத்திகளைக் கையாண்டார். 1960-களில் சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தை (PSA) உருவாக்கி, கப்பல்கள் வந்து செல்லும் மிகக் குறைந்த நேரத்தை உறுதி செய்தார்.

மலாக்கா நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் கட்டாயம் எரிபொருள் நிரப்ப வேண்டியிருக்கும் என்பதால், சிங்கப்பூரை எரிபொருள் மையமாக (Bunkering Hub) மாற்றினார். மலாக்கா நீரிணையில் கடல் கொள்ளையர் அச்சுறுத்தலைத் தடுக்க மலேசியா மற்றும் இந்தோனேசியாவுடன் இணைந்து கூட்டுப் பாதுகாப்புப் பணியை (Malacca Straits Patrol) ஏற்படுத்தி, சிங்கப்பூர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
1966-ஆம் ஆண்டு உலக வங்கியின் (World Bank) எச்சரிக்கையையும் மீறி, லீ குவான் இயூவின் அரசு தஞ்சோங் பகார் (Tanjong Pagar) பகுதியில் முதல் கன்டெய்னர் முனையத்தை அமைக்க 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.
தற்போது சிங்கப்பூர் துறைமுகம் 600-இற்கும் மேற்பட்ட துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய சரக்குகளை ஒரு கப்பலிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் மையங்களில் (Transshipment Hub) இரண்டாவது பெரிய மையமாகத் திகழ்கிறது. முதலிடத்தில் சீனாவின் ஷாங்காய் துறைமுகம் (Port of Shanghai) திகழ்கிறது.
தற்போது சிங்கப்பூர் உலகின் மிகப்பெரிய தானியங்கித் துறைமுக (Tuas Mega Port) திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது ஆண்டிற்கு 65 மில்லியன் சரக்குப் பெட்டிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இது மலாக்கா நீரிணையின் வர்த்தகத்தை முழுமையாகத் தன் வசம் வைத்திருக்கும். இந்தத் திட்டத்தை 2040-இல் முடிவடையத் திட்டமிட்டுள்ளனர்.
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்பக் குறைவான கார்பன் வெளியேற்றத்தைக் கொண்ட எரிபொருள்களைக் கப்பல்களுக்கு வழங்கும் முதல் மையமாகச் சிங்கப்பூர் மாறிவருகிறது. மலாக்கா நீரிணையில் கப்பல்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க AI மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் கப்பல் போக்குவரத்தைச் சீரமைக்கின்றனர்.
சிங்கப்பூரில் சிறுதளவு கூட எண்ணெய் கிடைப்பதில்லை. ஆனால் இன்று அது ஆசியாவின் பிரதான எண்ணெய் வர்த்தக மையமாகும். உலகக் கப்பல் எரிபொருள் விற்பனையில் (Bunkering) சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. 2024-ஆம் ஆண்டு தரவுகளின்படி 54 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கப்பல் எரிபொருள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.
நவீன டிஜிட்டல் புரட்சி
1990-களில் வெறும் உற்பத்தியை மட்டும் நம்பியிருக்காமல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் (R&D) முன்னுரிமை அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் மருத்துவ அறிவியல் (Biomedical Sciences) ஆகிய துறைகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டன.
லீ குவான் இயூ உருவாக்கிய ஊழலற்ற நிர்வாக முறையைப் பின்னால் வந்த பிரதமர்களும் தொடர்ந்தார்கள். 2014-இல் பிரதமர் லீ சியன் லூங் ‘ஸ்மார்ட் நேஷன்’ (Smart Nation) முன்முயற்சியைத் தொடங்கினார். பணப்பரிமாற்றம் முதல் அரசாங்க சேவைகள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன.
2030-க்குள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் 2050-க்குள் ‘நிகர பூஜ்ஜியம்’ (Net Zero) நிலையை அடைதல் என்ற ‘சிங்கப்பூர் பசுமைத் திட்டத்தை’ கொண்டு வந்தனர். 2026-க்குள் சிங்கப்பூரில் 60,000 மின்சார வாகன மின்னேற்றப் புள்ளிகளை (EV Charging Points) அமைக்கப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சூரிய சக்தி பயன்பாட்டை 5 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய நூற்றாண்டில் சிங்கப்பூர் தன்னை ஒரு நவீன சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக மாற்றிக்கொண்டது. சிங்கப்பூரின் அடையாளத்தை மாற்றும் வகையில் பிரம்மாண்டமான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் என்பது இயற்கை வளங்கள் ஏதுமற்ற ஒரு சிறு தீவு, லீ குவான் இயூ போன்ற சிறந்த தலைவர்களின் தொலைநோக்குச் சிந்தனையால் உலகத் தரம் வாய்ந்த நாடாக மாறிய ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.
1965-களில் தனிநபர் வருமானம் சுமார் 516 அமெரிக்க டாலர். தற்போது சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் IMF-இன் 2026 ஏப்ரல் அறிக்கையின்படி 107,760 அமெரிக்க டாலராகும். உலக வல்லரசான அமெரிக்காவின் தனிநபர் வருமானமே 94,430 அமெரிக்க டாலர். அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தை விடச் சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2026-இல் IMF தரவுகளின்படி சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 659.57 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். சிங்கப்பூர் 3.5% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதன் வாங்குதிறன் (PPP) அடிப்படையிலான GDP 1.06 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டின் அசாத்திய பொருளாதார வலிமையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் FAQ :
1. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்தபோது இருந்த நிலை என்ன?
ஆகஸ்ட் 9, 1965-இல் மலேசியாவிலிருந்து நீக்கப்பட்டபோது, சிங்கப்பூர் இயற்கை வளங்களோ, போதிய குடிநீரோ, சொந்த ராணுவமோ இல்லாத ஒரு சிறிய மீன்பிடித் தீவாக இருந்தது. லீ குவான் இயூ கண்ணீருடன் இந்த விடுதலையை அறிவித்தாலும், அந்தச் சவாலையே நாட்டின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமாக மாற்றினார்.
2. லீ குவான் இயூவின் பொருளாதார உத்திகள் எவை?
பொருளாதார வளர்ச்சி வாரியம் (EDB) மற்றும் ஜூரோங் (Jurong) தொழிற்சாலை மையத்தை உருவாக்கி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தார். வரிச் சலுகைகள் மற்றும் துறைமுக மேம்பாடு (PSA) மூலம் சரக்குப் பரிமாற்றத்தில் உலக அளவில் சிங்கப்பூரை இரண்டாம் இடத்திற்கு உயர்த்தினார்.
3. வீட்டு வசதி மற்றும் சேமிப்புத் திட்டங்கள் மக்களை எவ்வாறு உயர்த்தின?
வீடமைப்பு மேம்பாட்டு வாரியம் (HDB) மூலம் தரமான வீடுகளைக் கட்டினார். ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை மத்திய சேம நிதி (CPF) மூலம் சேமிக்கச் செய்து, அதன் மூலம் மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கான தவணையைச் செலுத்தும் முறையைக் கொண்டுவந்தார். இதனால் 90-களில் 87% மக்கள் சொந்த வீடுகளைப் பெற்றனர்.
4. சிங்கப்பூரின் ‘அமைவிடம்’ மற்றும் ‘பாதுகாப்பு’ எவ்வாறு கையாளப்பட்டது?
உலகின் முக்கிய கடல் பாதையான மலாக்கா நீரிணையைப் பயன்படுத்தி, சிங்கப்பூரை உலகின் முதன்மை எரிபொருள் மையமாக (Bunkering Hub) மாற்றினார். நாட்டின் பாதுகாப்பிற்காக 1967-இல் கட்டாயத் தேசிய சேவை (National Service) சட்டத்தைக் கொண்டு வந்தார்.
5. 2026-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தற்போதைய பொருளாதார நிலை என்ன?
IMF-இன் 2026 தரவுகளின்படி, சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் 107,760 அமெரிக்க டாலராக உயர்ந்து, வல்லரசான அமெரிக்காவையே முந்தியுள்ளது. தற்போது ‘ஸ்மார்ட் நேஷன்’ மற்றும் ‘2050 நிகர பூஜ்ஜியம்’ (Net Zero) போன்ற திட்டங்கள் மூலம் சிங்கப்பூர் எதிர்காலத் தொழில்நுட்பப் புரட்சியை நோக்கி நகர்கிறது.



