ஈரான் வரலாறு பண்டைய பேரரசு முதல் நவீன போர் வரை முழுத் தொகுப்பு

ஈரான் வரலாறு பண்டைய பேரரசு முதல் நவீன போர் வரை முழுத் தொகுப்பு

இந்தக் காலகட்டத்தில் ‘ஈரான்’ என்ற பெயரைக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றத்தினால், ஓர்முசு நீரிணை (Strait of Hormuz) ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாகப் பல நாடுகளில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. கம்போடியாவில் 68%, வியட்நாமில் 50%, கனடாவில் 28% மற்றும் சிங்கப்பூரில் 22% என எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்காளதேசம், தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தனது பலத்தைக் காட்டவும் ஈரான் ஓர்முசு நீரிணையைக் (Strait of Hormuz) கட்டுப்படுத்துவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

ஈரான் என்பது பண்டைய பாரசீகப் பேரரசாகும் (Persian Empire). 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் சக்திவாய்ந்த நாடாக இது திகழ்ந்தது. இயற்கை வளங்கள் நிறைந்த ஈரானின் கச்சா எண்ணெய் இருப்பு, உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது 10 சதவீதமாக உள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் இருப்பில் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதுமட்டுமன்றி, இயற்கை எரிவாயு இருப்பில் உலக அளவில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ள ஈரான், ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ (South Pars) எரிவாயு வயல், உலகின் மிகப்பெரிய கடல்சார் எரிவாயு வயலாகும்.

ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ள ஈரான், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களை இணைக்கும் ஒரு முக்கியப் புள்ளியாகத் திகழ்கிறது. ஈரானுக்கு இயற்கையான அரணாகவும் பாதுகாப்பாகவும் இரண்டு முக்கிய மலைத்தொடர்கள் உள்ளன. ஈரானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ள சக்ரோஸ் (Zagros) மலைத்தொடர், ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே ஒரு பெரிய இயற்கைப் சுவராக நின்று பாதுகாக்கிறது. ஈரானின் வடக்குப் பகுதியில் காஸ்பியன் கடலுக்கும் நிலப்பரப்பிற்கும் இடையே அல்போர்ஸ் (Alborz) மலைத்தொடர் அமைந்துள்ளது. மலைகளை அரணாகவும், வளங்களை அணிகலனாகவும் சூடிக்கொண்ட ஈரானின் வீரமிக்கப் பயணமே ‘ஈரான் வரலாறு’ எனும் இந்த வரலாற்றுப் பதிவாகும்.

1. பாரசீகப் பேரரசின் பொற்காலம்

ஈரான் வரலாற்றைப் பார்க்கும்போது, பாரசீகப் பேரரசான அகாமனிசியப் பேரரசின் (Achaemenid Empire) எழுச்சியே மிக முக்கியமானது. கி.மு. 550-இல் ‘மகா சைரஸ்’ (Cyrus the Great) இப்பேரரசைத் தோற்றுவித்தார். இவர் மற்ற மன்னர்களைப் போலன்றி, தான் கைப்பற்றிய நாடுகளின் கலாச்சாரம் மற்றும் மதச் சுதந்திரத்தை மதித்தார். இவரின் இந்த அணுகுமுறை மக்கள் அவர் மீது மிகுந்த அன்பு கொள்ளக் காரணமானது.

அகாமனிசியப் பேரரசின் வளர்ச்சிக்கு ‘இம்மார்டல்ஸ்’ (Immortals) என்று அழைக்கப்படும் ஒரு நிலையான, பலம் வாய்ந்த இராணுவப் படையை அவர் உருவாக்கினார். இந்தப் படை 10,000 போர் வீரர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவாகும். இதில் ஒரு வீரர் இறந்தாலோ அல்லது காயமடைந்தாலோ, உடனடியாக வேறொருவர் அந்த இடத்திற்கு மாற்றப்படுவார். இதன் மூலம் படை பலம் என்றும் குறையாமல் பராமரிக்கப்பட்டது.

இதன் விளைவாக ஈராக், வடக்கு சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், லெபனான், சிரியா, பண்டைய எகிப்து, லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகள் என சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளின் நிலப்பரப்பை இப்பேரரசு உள்ளடக்கியிருந்தது. அக்காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் சுமார் 44 சதவீதத்தினர் இந்தப் பேரரசின் கீழ் வாழும் அளவிற்குப் பாரசீகப் பேரரசு விரிவடைந்திருந்தது.

முதலாம் டேரியஸ் மன்னரின் காலத்தில், பாரசீகப் பேரரசு ஒரு ‘சூப்பர் பவர்’ (Super Power) நாடாக மாறியது. போர்க்களங்களைக் கடந்தும், அவர்களின் அறிவுத்திறமையே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது:

  • சத்ராபி முறை (Satrapy System): ஒட்டுமொத்தப் பேரரசையும் 20 மாகாணங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆளுநரை (Satrap) நியமித்தார். இவ்வளவு பெரிய பரப்பளவையும் ஒரே மையத்தின் கீழ் ஆள இம்முறை உதவியது. பாரசீகப் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோது, 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.
  • நாணய முறை: ‘டாரிக்’ (Daric) என்ற ஒரே மாதிரியான நாணயத்தை அறிமுகப்படுத்தினார். இது சர்வதேச வர்த்தகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
  • தகவல் தொடர்பு: சர்திஸ் (Sardis) முதல் சூசா (Susa) வரை 2,400 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலைகளை அமைத்து, குதிரைகள் மூலம் செய்திகளை மிக வேகமாகப் பரிமாறிக்கொள்ளும் முறையை உருவாக்கினார்.

கி.மு. 550 முதல் கி.மு. 331 வரை உலகையே வியக்க வைத்த அகாமனியப் பேரரசு, மாவீரன் அலெக்சாண்டரின் தொடர்ச்சியான படையெடுப்புகளால் முடிவுக்கு வந்தது. குறிப்பாக, கி.மு. 334-இல் தனது பாரசீகப் படையெடுப்பைத் தொடங்கிய அலெக்சாண்டர், கிரானிகஸ் மற்றும் இஸஸ் போர்களில் வெற்றி பெற்றார். இறுதியில், கி.மு. 331-இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கௌகமேலாப் போரில் (Battle of Gaugamela) பாரசீக மன்னர் மூன்றாம் டேரியஸ் தோற்கடிக்கப்பட்டார். இது பாரசீகத்தின் பொற்காலம் ஒரு பெரும் சரிவைச் சந்திக்கக் காரணமாக அமைந்தது.

எனினும், ஈரான் வரலாறு என்பது வெறும் வீழ்ச்சிகளால் ஆனது அல்ல; அது காலத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் வலிமை கொண்டது. அகாமனியர்கள் விதைத்த அந்த நிர்வாக முறையும், கலை நயமும் பிற்கால ஈரானியத் தத்துவங்களுக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தன.

ஈரான் வரலாறு பண்டைய பேரரசு முதல் நவீன போர் வரை முழுத் தொகுப்பு

2. ஈரான் வரலாறு: இஸ்லாமிய வருகையும் ஒரு புதிய கலைப் புரட்சியும்

அகாமனிசியப் பேரரசுக்குப் பிறகு ஈரானை ஆண்ட பலமான பேரரசு சாசானியப் பேரரசு (Sassanid Empire) ஆகும். பாரசீகப் பேரரசு முழுமையாகக் கைப்பற்றப்பட்டது இஸ்லாமியக் கலீஃபகத்தின் இரண்டாவது ஆட்சியாளரான உமர் இப்னு அல்-கத்தாப் (ரலி) அவர்களின் காலத்தில்தான்.

கி.பி. 633-ல், இஸ்லாமியக் கலீஃபகத்தின் முதலாவது கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், புகழ்பெற்ற தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் பாரசீக எல்லைகளைக் கைப்பற்றப் படைகள் அனுப்பப்பட்டன.

பாரசீகப் படை வீரர்கள் போர்க்களத்திலிருந்து தப்பியோடக் கூடாது என்பதற்காகவும், தற்காப்பு அரணைப் பலப்படுத்தவும் தங்களைத் தாங்களே சங்கிலிகளால் பிணைத்துக்கொண்டு போரிட்டனர். இதனால் இப்போரை வரலாறு ‘சங்கிலிப் போர்’ (Battle of Chains) என்று அழைக்கிறது. பாரசீகப் பேரரசுக்கு ஹோர்மிஸ்டு (Hormizd) தலைமை தாங்கினார். இந்தப் போரில் அவர் கொல்லப்பட்டார். அசைக்க முடியாத வல்லரசாகத் திகழ்ந்த பாரசீகப் பேரரசின் வீழ்ச்சிக்கு இந்தப் போர் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

அடுத்ததாக, ஈரான் வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராகக் கருதப்படுவது காத்சியா போர் (Battle of al-Qadisiyyah) ஆகும். இது கி.பி. 636-ல் நடைபெற்றது. சாசானியப் பேரரசுக்கு ருஸ்தம் ஃபாரோக்ஜாத் (Rustam Farrokhzad) தலைமை தாங்கினார். கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில், சாத் இப்னு அபி வக்காஸ் (ரலி) தலைமையில் சுமார் நான்கு நாட்கள் இந்தப் போர் நடைபெற்றது.

காத்சியா போரில் ருஸ்தம் ஃபாரோக்ஜாத் (Rustam Farrokhzad) கொல்லப்பட்டார். தளபதி வீழ்ந்தவுடன் பாரசீகப் படை சிதறி ஓடியது. இந்த வெற்றியின் மூலம் பாரசீகத்தின் தலைநகரான சிஸ்போன் (Ctesiphon) இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

காத்சியா போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, சாசானியப் பேரரசு தனது அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட முயன்றது. இதற்காகப் பாரசீகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 1,50,000 வீரர்களைத் திரட்டி, சாசானிய மன்னர் மூன்றாம் யாஸ்டெகெர்ட் (Yazdegerd III) முஸ்லிம்களைத் தாக்கத் திட்டமிட்டார்.

கி.பி. 642-ல் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், முஸ்லிம் படைத்தளபதி நுஃமான் இப்னு முகர்ரின் (Nu’man ibn Muqrin) தலைமைக்கும், பாரசீகத் தளபதி ஃபைருசான் (Firuzan) தலைமைக்கும் இடையே நிஹாவந்த் போர் (Battle of Nihawand) நடைபெற்றது.

முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை சுமார் 40,000 மட்டுமே இருந்தது. பாரசீகப் படையினர் மலைப்பாங்கான பகுதியில் தற்காப்பு நிலையில் இருந்தனர். அப்போது முஸ்லிம் படைகள் பின்வாங்குவது போல நடித்து, பாரசீகப் படையினரை மலையிலிருந்து கீழே இறங்க வைத்தனர். அவர்கள் சமவெளிக்கு வந்தவுடன், முஸ்லிம் படையினர் திடீரெனத் தாக்குதலைத் தொடங்கி அவர்களைச் சிதறடித்தனர். முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், போர்த்தந்திரத்தில் வலிமையாக இருந்தனர்.

இந்தப் போரில் பாரசீகப் படை மிக மோசமான தோல்வியைத் தழுவியது; தளபதி ஃபைருசான் கொல்லப்பட்டார். நிஹாவந்த் போர் வெற்றிக்குப் பிறகு, பாரசீகத்தின் மற்ற நகரங்கள் ஒவ்வொன்றாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன. இஸ்லாமிய வருகைக்கு முன் ஈரானிய மக்கள் ஜோராஸ்ட்ரியனிசம் (Zoroastrianism) மதத்தைப் பின்பற்றினர். முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் ஈரானிய மக்கள் மெதுவாக இஸ்லாத்தைத் தழுவினர்.

இஸ்லாமிய வருகைக்குப் பின், ஈரானியக் கட்டடக்கலை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது. சாசானிய வளைவு முறைகளும் (Sassanid arches), இஸ்லாமிய வடிவியல் முறைகளும் இணைந்து உலகப்புகழ் பெற்ற மசூதிகளும் அரண்மனைகளும் உருவாயின.

இஸ்லாமியப் பொற்காலத்தில் ஈரானிய அறிஞர்கள் உலகிற்கு வழங்கிய பங்களிப்பு ஈடு இணையற்றது.

  • இப்னு சீனா (Avicenna): இவர் ‘மருத்துவத் துறையின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். ஈரானின் மருத்துவ அறிவை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரைச் சாரும்.
  • அல்-குவாரிஸ்மி (Al-Khwarizmi): கணிதத்தில் ‘அல்காரிதம்’ (Algorithm) மற்றும் ‘அல்ஜீப்ரா’ (Algebra) ஆகியவற்றை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அகாமனிய மற்றும் சாசானியப் பேரரசுகளின் நிர்வாகத் திறமையையும், இஸ்லாமியப் பண்பாட்டின் தத்துவங்களையும் ஒருங்கிணைத்து, ஈரான் ஒரு தனித்துவமான ‘இஸ்லாமியப் பாரசீகக் கலாச்சாரத்தை’ உருவாக்கியது. இதுவே பிற்காலத்தில் சபாவித் பேரரசு (Safavid Empire) போன்ற வலிமையான ஆட்சிகள் அமையக் காரணமாக இருந்தது.

ஈரான் வரலாறு பண்டைய பேரரசு முதல் நவீன போர் வரை முழுத் தொகுப்பு

3. சபாவித் வம்சம்: நவீன ஈரானின் அடித்தளம்

சபாவித் வம்சம் (Safavid Dynasty) கி.பி. 1501 முதல் 1736 வரை ஈரானை ஆண்டது. பன்னிரு இமாம்களைப் பின்பற்றும் ஷியா பிரிவை அடிப்படையாகக் கொண்ட இந்த அரசு, ஈரானை ஒரு வலிமையான உலக சக்தியாக மாற்றியது.

சபாவித் வம்சத்தின் நிறுவனரான முதலாம் இஸ்மாயில், 1501-ல் தப்ரிஸ் (Tabriz) நகரைக் கைப்பற்றித் தன்னை ஈரானின் ‘ஷா’ (சக்கரவர்த்தி) என்று அறிவித்துக்கொண்டார். ஷா இஸ்மாயில் ஷியா இஸ்லாத்தைத் தேசத்தின் அதிகாரப்பூர்வ மதமாக அறிவித்தார்.

சபாவித் பேரரசு தற்போதைய ஈரான், ஈராக், அஜர்பைஜான், ஜார்ஜியா, குவைத் மற்றும் சிரியா, துருக்கியின் சில பகுதிகள், வடக்கு காகசஸ், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய ஒரு பெரும் பகுதியை ஆட்சி செய்தது. போர்க்களங்களில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியதால், இப்பேரரசு ‘வெடிமருந்துப் பேரரசு’ (Gunpowder Empire) என்றும் அழைக்கப்படுகிறது.

சபாவித் காலத்தில் பாரசீக மொழி, கலை மற்றும் கட்டடக்கலை மீண்டும் எழுச்சி பெற்றது. கி.பி. 1588 முதல் 1629 வரை ஆட்சி செய்த மாமன்னர் ஷா அப்பாஸ் (Shah Abbas) காலமே ஈரானிய வரலாற்றின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இவர் தனது தலைநகரை கஸ்வினிலிருந்து (Qazvin) இஸ்ஃபஹான் (Isfahan) நகரத்திற்கு மாற்றினார். இவர் தனது பெரும்பாலான நேரத்தை மக்களிடையே கழித்தார். தலைநகர் இஸ்ஃபஹானின் கடைவீதிகள் மற்றும் பொது இடங்களுக்குத் தாமே நேரில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“இஸ்ஃபஹான் உலகின் பாதி” (Isfahan is half the world) என்று புகழப்படும் அளவுக்கு, இக்காலத்தில் கலை மற்றும் கட்டடக்கலை அதன் உச்சத்தைத் தொட்டது. பாரசீகக் கட்டிடக்கலையில் ஏழு வண்ண ஓடுகளைப் பயன்படுத்தும் முறை (Seven-colored tiles) சபாவித் காலத்தில் மிகவும் பிரபலமானது. காஜு பாலம் (Khaju Bridge) மற்றும் சி-ஓ-சே-போல் (Si-o-se-pol) போன்ற பாலங்கள் வெறும் போக்குவரத்துக்காக மட்டுமன்றி, மக்கள் கூடும் இடங்களாகவும், நதிநீரை முறைப்படுத்தும் அணைகட்டுகளாகவும் வடிவமைக்கப்பட்டன.

சபாவித் வம்சத்தின் பொற்காலத்திற்குப் பிறகு வந்த ஷா சுல்தான் ஹுசைன் காலத்தில் நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்தது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட ஆப்கானியப் பழங்குடியினர், கி.பி. 1722-ல் தலைநகர் இஸ்ஃபஹானைக் கைப்பற்றினர். இது பேரரசின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக அமைந்தது. அப்போது சபாவித் படையில் தளபதியாக இருந்த நாதிர் ஷா (Nadir Shah), ஆப்கானியர்களைத் தோற்கடித்து விரட்டியடித்தார். இருப்பினும், அவர் சபாவித் மன்னர்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்காமல், 1736-ல் தன்னைத்தானே ஈரானின் மன்னராக அறிவித்துக்கொண்டார். இதன் மூலம் 235 ஆண்டுகால சபாவித் வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து, அஃப்ஷரித் வம்சம் தொடங்கியது.

4. பஹ்லவி மன்னராட்சி மற்றும் மேற்கத்திய தாக்கம்

காஜர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ராணுவத் தளபதியாக இருந்த ரெஸா ஷா பஹ்லவி (Reza Shah Pahlavi) அதிகாரத்தைக் கைப்பற்றி, பஹ்லவி வம்சத்தைத் தோற்றுவித்தார்.

ரெஸா ஷா பஹ்லவி, 1935-ல் தனது நாடு மேல்நாட்டினரால் வழங்கப்பட்ட ‘பெர்சியா’ (Persia) என்ற பெயரால் அழைக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே, பண்டைய பாரசீகச் சொல்லான ‘ஆரியனம்’ என்பதிலிருந்து வந்த ‘ஈரான்’ என்று நாட்டின் பெயரை மாற்றினார். இதற்கு ‘ஆரியர்களின் நிலம்’ என்று பொருள்.

இவர் மதச் சட்டங்களுக்குப் பதிலாக ஐரோப்பிய பாணி சட்டங்களைக் கொண்டு வந்தார். நாட்டின் முதல் நவீனப் பல்கலைக்கழகமான தெஹ்ரான் பல்கலைக்கழகம் இக்காலத்தில்தான் நிறுவப்பட்டது.

இவரது ஆட்சிக்காலத்தில் ட்ரான்ஸ்-இரானியன் ரயில்வே (Trans-Iranian Railway) அமைக்கப்பட்டது ஒரு மிக முக்கியமான சாதனையாகும். இந்த ரயில் பாதை ஈரானின் வடக்கே உள்ள காஸ்பியன் கடலிலிருந்து, தெற்கே உள்ள பாரசீக வளைகுடா வரை சுமார் 1,394 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டது.

இந்தப் பாதை ஈரானின் வர்த்தகம் மற்றும் ராணுவ வலிமைக்கு முதுகெலும்பாக அமைந்தது. இது அல்போர்ஸ் மற்றும் சாக்ரோஸ் மலைத்தொடர்களைக் கடந்து செல்கிறது. இதற்காகப் பல சுரங்கப்பாதைகளும் பாலங்களும் கட்டப்பட்டன. இதில் புகழ்பெற்ற வெரெஸ்க் பாலம் (Veresk Bridge) மிகப்பெரிய பள்ளத்தாக்கிற்கு குறுக்கே மிக உயரத்தில் கட்டப்பட்டது. இந்தத் திட்டம் முழுக்க முழுக்க உள்நாட்டுப் பணத்தைக் கொண்டு செயல்படுத்தப்பட்டது இதன் சிறப்பம்சமாகும்.

இவரது மகனான முகமது ரெஸா ஷா (Mohammad Reza Shah) காலத்தில் (கி.பி. 1941 – 1979), ஈரான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவு கொண்டது.

இவர் ‘வெள்ளைப் புரட்சி’ (White Revolution) என்பதன் மூலம் ரத்தம் சிந்தாமல் நிலச் சீர்திருத்தம், பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் கல்வியறிவை மேம்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

ஈரானிய சமூகம் மேற்கத்திய ஆடைகள், இசை மற்றும் வாழ்க்கை முறைக்கு மாறியது; இது ‘மேற்கத்தியமயமாக்கல்’ (Westernization) என்று அழைக்கப்பட்டது. ஈரானின் எண்ணெய் வளம் அதன் வளர்ச்சிக்கு உதவியது போலவே, வெளிநாடுகளின் தலையீட்டிற்கும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

ஈரானில் 1906-ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின்படி, நாடு அரசியலமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சியாக (Constitutional Monarchy) மாறியது. இதன்படி, மன்னர் நாட்டின் தலைவராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தால் முன்மொழியப்படும் ஒருவர் பிரதமராகவும் இருப்பார். அந்தப் பிரதமரே நாட்டின் நிர்வாகத் தலைவராகவும், அமைச்சரவையை வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும் என்று சட்டம் மாற்றப்பட்டது.

1950-களில் ஈரானிய எண்ணெய் கிணறுகள் அனைத்தும் பிரிட்டனுக்குச் சொந்தமான ‘ஆங்கிலோ-இரானியன் ஆயில் கம்பெனி’ (Anglo-Iranian Oil Company) கட்டுப்பாட்டில் இருந்தன. அக்காலத்தில் ஈரானுக்குக் கிடைத்த லாபத்தை விட, அந்த நிறுவனம் பிரிட்டன் அரசுக்குச் செலுத்திய வரிப்பணம் அதிகமாக இருந்தது.

1951-ல் முகமது மொசாதிக் ஈரானின் பிரதமராகப் பொறுப்பேற்றார். “ஈரானின் சொத்து ஈரானியர்களுக்கே” என்ற கொள்கையின்படி, ஈரானிய நாடாளுமன்றத்தில் எண்ணெய் தொழிலைத் தேசியமயமாக்குவதற்கான (Nationalization of Oil) சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் ஆங்கிலோ-இரானியன் ஆயில் கம்பெனியின் முழுக் கட்டுப்பாடும் ஈரான் அரசின் வசம் வந்தது. இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; இதனால் பிரிட்டன் ஈரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

மன்னராக இருந்த முகமது ரெஸா ஷா, மொசாதிக்கின் செயல்பாடுகள் தனது அதிகாரத்திற்கு ஆபத்து என்று கருதினார். அவர் மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமாகச் செல்லவே விரும்பினார். எனவே, மொசாதிக்கைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்க முயன்றார்.

முகமது ரெஸா ஷா, 1953-ல் பிரதமர் மொசாதிக்கைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு, மன்னரின் பாதுகாவலர் படையைச் சேர்ந்த கர்னல் நசீரை மொசாதிக்கின் வீட்டிற்கு அனுப்பினார். ஆனால், இதை முன்கூட்டியே அறிந்திருந்த மொசாதிக், தனது ஆதரவு ராணுவ வீரர்களைக் கொண்டு கர்னல் நசீரைச்து கைது செய்தார். தனது திட்டம் தோல்வியடைந்ததைக் கண்ட மன்னர், உடனடியாக விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் கோபமடைந்த அமெரிக்கா, சி.ஐ.ஏ (CIA) அதிகாரி கெர்மிட் ரூஸ்வெல்ட் ஜூனியரை ஈரானுக்கு அனுப்பியது. அவர் அங்கு தங்கியிருந்து ‘ஆபரேஷன் அஜாக்ஸ்’ (Operation Ajax) திட்டத்தைத் தீட்டினார். பல கோடி ரூபாயைச் செலவு செய்து, வாடகைக்கு ஆட்களைத் திரட்டி, அவர்கள் மொசாதிக்கின் ஆதரவாளர்களைப் போல நடித்துத் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபடச் செய்தனர். இதன் மூலம் மொசாதிக்கின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்ற பிம்பத்தை உலகிற்கு அமெரிக்கா காட்டியது.

ஈரானியப் பத்திரிகையாளர்களுக்கும் வானொலி நிலையங்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டு, மொசாதிக்கைப் பற்றித் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், மதத்திற்கு எதிரானவர் என்றும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

ராணுவ அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து மொசாதிக்கிற்கு எதிராகத் திருப்பி, ராணுவப் புரட்சியை ஏற்படுத்தினர். பீரங்கிகளுடன் வந்து அவரது வீட்டை முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினர். மொசாதிக் அத்தாக்குதலிலிருந்து தப்பிச் சென்று, மறுநாளே ராணுவத்திடம் சரணடைந்தார்.

பின்னர் மீண்டும் மன்னர் முகமது ரெஸா ஷா ஈரான் திரும்பினார், அமெரிக்காவின் முழு ஆதரவுடன் அதிகாரம் கொண்ட மன்னராக மாறினார். மொசாதிக்கின் ஆதரவாளர்கள் வேட்டையாடப்பட்டனர். ஈரானின் எண்ணெய் வளம் மீண்டும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டமைப்பிற்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

இது ஈரானிய மக்களிடையே மேற்கத்திய நாடுகள் மீது தீராத கோபத்தை ஏற்படுத்தியது. இந்தத் தலையீடுதான் பின்னாளில் 1979-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

ஈரான் வரலாறு பண்டைய பேரரசு முதல் நவீன போர் வரை முழுத் தொகுப்பு

5. 1979 இஸ்லாமியப் புரட்சி

ஈரானிய வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனை 1979-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சியாகும். இது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; ஈரானின் 2500 ஆண்டுகால மன்னராட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு மிகப்பெரிய மக்கள் எழுச்சியாகும்.

மீண்டும் முகமது ரெஸா ஷா ஆட்சிக்கு வந்ததும், ஈரானை ஒரு மேற்கத்திய நாடாக மாற்ற முயன்றார். இது ஈரானின் பாரம்பரிய இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதாக மதத் தலைவர்களும் சாதாரண மக்களும் கருதினர்.

1970-களில் ஈரானின் எண்ணெய் வருமானம் விண்ணைத் தொட்டது; ஆனால், அந்தப் பணம் நாடு முழுவதும் சமமாகச் சென்றடையவில்லை. மன்னருக்கு நெருக்கமானவர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் பெரும் வணிகர்கள் அதீத ஆடம்பரத்தில் வாழ்ந்தனர்.

திடீரென்று சந்தையில் புழங்கிய அதிகப்படியான பணத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. கிராமப்புற மக்கள் பிழைப்புத் தேடி நகரங்களுக்கு வந்தனர்; ஆனால், அவர்களுக்கு முறையான வீடோ, வேலையோ கிடைக்கவில்லை. தெஹ்ரான் போன்ற நகரங்களில் ஒருபுறம் நவீன வானளாவிய கட்டிடங்களும், மறுபுறம் வறுமையில் வாடும் சேரிகளும் உருவாகின. இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ரெஸா ஷா மன்னர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ‘சாவாக்’ (SAVAK) என்ற உளவுப்பிரிவை 1957-ல் உருவாக்கியிருந்தார். இது அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) மற்றும் இஸ்ரேலின் மொசாட் (Mossad) உதவியுடன் பயிற்சியளிக்கப்பட்டது.

ஈரானிய சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சாவாக் உளவுப்பிரிவு கண்காணித்தது. மன்னரின் கொள்கைகளை விமர்சித்த மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் எவ்வித விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டனர். சிறைகளில் அவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் உலக நாடுகளையே அதிர்ச்சியடைய வைத்தன.

மன்னருக்கு எதிரான போராட்டத்தின் மையப்புள்ளியாக அயதுல்லா ரூஹுல்லா கொமேனி திகழ்ந்தார். அவர் ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்டு பிரான்சில் இருந்தபோதிலும், அவரது உரைகள் ஒலிநாடாக்கள் (Cassettes) மூலம் ஈரான் முழுவதும் பரவின. அவை மக்களைப் புரட்சிக்குத் தூண்டின.

1978-ல் மாணவர்கள் மற்றும் மத அமைப்பினர் தொடங்கிய போராட்டங்கள் நாடு முழுவதும் பரவின. ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியது. ராணுவ வீரர்கள் பலர் தங்கள் சீருடையைக் கழற்றிவிட்டுப் போராட்டக்காரர்களுடன் இணையத் தொடங்கினர்.

1979 ஜனவரி 16-ஆம் தேதி, நிலைமை கையை மீறிச் சென்றதால் மன்னர் முகமது ரெஸா ஷா ஈரானை விட்டு வெளியேறினார். மன்னர் நாட்டை விட்டு வெளியேறிய தகவல் கிடைத்தவுடன், ஈரான் முழுவதும் மக்கள் தெருக்களில் இறங்கிக் கொண்டாடினர்.

15 ஆண்டுகால நாடுகடத்தலுக்குப் பிறகு, அயதுல்லா கொமேனி 1979 பிப்ரவரி 1-ஆம் தேதி பிரான்சிலிருந்து ஈரான் திரும்பினார். ஈரானிய ராணுவமும் “நாங்கள் நடுநிலை வகிக்கிறோம்” என அறிவித்தது. இதனால் மன்னராட்சி அதிகாரப்பூர்வமாக வீழ்ந்தது.

மன்னராட்சி வீழ்ந்த பிறகு, நாட்டின் எதிர்கால ஆட்சி முறையைத் தீர்மானிக்க 1979 மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட்டது. “மன்னராட்சிக்கு மாற்றாக இஸ்லாமியக் குடியரசு முறையை ஏற்கிறீர்களா?” என்ற கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று வாக்களிப்பதே இந்தப் பொதுத்தேர்தல்.

மார்ச் 31 நள்ளிரவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபோது, 98 சதவீத மக்கள் இஸ்லாமியக் குடியரசு ஆட்சி முறைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் ஈரான் இஸ்லாமியக் குடியரசாக மாறியது.

இந்த ஆட்சி முறை மக்கள் பிரதிநிதிகளையும், ஜனாதிபதியையும் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை என்றாலும், நாட்டின் சட்டங்கள் அனைத்தும் ஷரியா சட்டங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். இதில் ‘விலாயத்-இ-ஃபகிஹ்’ (Velayat-e Faqih) என்ற கோட்பாடு சேர்க்கப்பட்டு, நாட்டின் இறுதி அதிகாரம் உச்சத்தலைவர் அயதுல்லா கொமேனி வசமே இருக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டது.

ஈரானின் எண்ணெய் கிணறுகள் சர்வதேச நிறுவனங்களின் கூட்டமைப்பால் (Consortium) நிர்வகிக்கப்பட்டு வந்தன. ஆனால், புரட்சிக்குப் பிறகு புதிய இஸ்லாமிய அரசு அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது. ஈரானின் மொத்த எண்ணெய் வளமும் அரசுக்குச் சொந்தமான ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனம் (NIOC) வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.

அந்நிய ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியபோது, ஈரானின் இரண்டாயிரம் ஆண்டுகால மன்னராட்சி மக்கள் புரட்சியால் வீழ்ந்தது. 1979-இல் திரண்ட கோடிக்கணக்கான மக்களின் எழுச்சி மன்னரைத் துரத்த, ஏப்ரல் 1-இல் மலர்ந்த புதிய இஸ்லாமியக் குடியரசு ஈரானின் அதிகாரத்தை மீண்டும் மக்களிடமே ஒப்படைத்த ஒரு வரலாற்றுத் திருப்புமுனையானது.

6. போர் மற்றும் தற்கால ஈரான்

இஸ்லாமியப் புரட்சி முடிந்தவுடன், 1980 முதல் 1988 வரை சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக், ஈரான் மீது படையெடுத்துப் போர் புரிந்தது. ஈரான் தனது நிலப்பகுதியை விட்டுக்கொடுக்காமல் தற்காத்துக்கொண்டது; இது ஈரானிய ராணுவத்தின் பலத்தை உலகிற்கு நிரூபித்தது.

1995-ல் அமெரிக்க அதிபர் கிளிண்டன் காலத்தில், ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடான்ஸ் (Natanz) அணு ஆராய்ச்சி மையத்தை ஈரான் ரகசியமாகத் தொடங்கியது. வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், இஸ்ஃபஹான் மாகாணத்தில் நடான்ஸ் நகரத்திற்கு அருகில் பல அடுக்குகளைக் கொண்ட மிக வலிமையான கான்கிரீட் கூரைகளை அமைத்து, நிலத்திற்கு அடியில் அணு ஆராய்ச்சி மையத்தை அமைத்தனர்.

ஈரான், கோம் (Qom) நகரத்திற்கு அருகில் ஒரு பெரிய மலைக்கு அடியில், 80-90 மீட்டர் ஆழத்தில் மிகக் கடினமான பாறைக்கு அடியில் 2006-ஆம் ஆண்டு ‘ஃபோர்டோ’ (Fordow) அணு ஆராய்ச்சி மையத் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. ஈரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதி வழிக்கானது என்று கூறினாலும், அது அணு ஆயுதத் தயாரிப்புக்கானது என்று உலக நாடுகள் கருதின. இதன் காரணமாக 2006-2010 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ஈரான் மீது தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2012-ல் சர்வதேச வங்கிப் பரிமாற்ற அமைப்பான ‘ஸ்விஃப்ட்’ (SWIFT) தளத்திலிருந்து ஈரான் நீக்கப்பட்டது; இது ஈரானின் உலகளாவிய வர்த்தகத்தைப் பெருமளவு பாதித்தது.

தடைகள் ஈரானுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், ஈரான் தனக்குத் தேவையான மருந்துகளில் 90 சதவீதத்தைத் தானே உற்பத்தி செய்கிறது. குறிப்பாக, ஸ்டெம் செல் ஆராய்ச்சி (Stem Cell Research) மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் (Nanotechnology) ஈரான் உலகில் முன்னிலையில் உள்ளது. உள்நாட்டுத் தேவைகளுக்குத் தனித்துவமான மென்பொருட்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளை உருவாக்கி வெற்றி கண்டது.

ஈரான் தனது மிக முக்கியமான சொத்துகளை மலைத்தொடர்களுக்கு அடியில், பல நூறு மீட்டர் ஆழத்தில், அதிர்வுகளைத் தாங்கும் வகையில் மிக நுட்பமாகவும் ரகசிய நுழைவாயில்களைக் கொண்டும் நிலத்தடி நகரங்களாக அமைத்துள்ளது. ஒரு சுரங்கப்பாதை தாக்கப்பட்டால், மற்றொரு சுரங்கப்பாதை வழியாகத் தளவாடங்களை நகர்த்தும் வகையில் சிக்கலான அமைப்பில் சுரங்கங்களை உருவாக்கியுள்ளனர்.

ஈரான் வரலாறு பண்டைய பேரரசு முதல் நவீன போர் வரை முழுத் தொகுப்பு

‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) குண்டுகள் நிலத்தைத் துளைத்துச் சென்று வெடிக்கும் திறன் கொண்டவை; ஆனால், உலகின் வலிமையான குண்டுகளால் கூட ஈரான் அமைத்துள்ள அந்த ஆழத்தை எட்ட முடியாது. மின்னணு சாதனங்களைச் செயலிழக்கச் செய்யும் ‘இ.எம்.பி’ (EMP) தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, இந்தச் சுரங்கங்கள் ‘ஃபாரடே கூண்டு’ (Faraday Cage) போன்ற பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டுள்ளன.

நிலத்தடிச் சுரங்க நகரங்களை அமைத்து, ஏவுகணை நகரங்கள் மற்றும் ராணுவ ட்ரோன் (Drone) தளங்களை ஈரான் உருவாக்கியுள்ளது. இங்கிருந்து ஈரானின் நவீன ட்ரோன்கள் மற்றும் நவீன ஏவுகணைகளை ஏவ முடியும். ராணுவத்தைத் தவிர்த்து, எரிசக்தி மற்றும் விமான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் இத்தகைய பாதுகாப்பான இடங்களில் ஈரான் அமைத்துள்ளது.

2015-ல் JCPOA ஒப்பந்தம் எனப்படும் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஈரானின் மீதான பொருளாதாரத் தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டன. ஆனால், 2018-ல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய பிறகு, ‘அதிகபட்ச அழுத்தம்’ (Maximum Pressure) என்ற பெயரில் மீண்டும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன.

பொருளாதாரத் தடையை முறியடிக்க ஈரான் சீனாவுடன் 25 ஆண்டுகால 400 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்தது. மேலும் BRICS மற்றும் SCO போன்ற சர்வதேச அமைப்புகளில் இணைந்ததன் மூலம், அமெரிக்கத் தலைமையிலான உலக ஒழுங்கிற்கு மாற்றாக ஒரு புதிய வலிமையான கூட்டணியை உருவாக்கியது. ரஷ்யா – உக்ரைன் போரின் போது ரஷ்யாவிற்கு ‘ஷாஹெத்’ (Shahed) ரக ட்ரோன்களை வழங்கியதன் மூலம் ரஷ்யாவுடன் ராணுவ ரீதியாக ஈரான் நெருக்கமடைந்துள்ளது.

2025-ல் நடான்ஸ் (Natanz) மற்றும் ஃபோர்டோ (Fordow) அணுசக்தி மையங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்கின. அமெரிக்க அதிபர் டிரம்ப், அணுசக்தி நிலையங்களை அழித்துவிட்டோம் என்று கூறினாலும், ஈரான் தொடர்ந்து யுரேனியத்தைச் செறிவூட்டி வருகிறது என்று கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் 2026 பிப்ரவரி 28 அன்று அயதுல்லா அலி கமேனியைக் குண்டு வீசிக் கொலை செய்தார்.

இதனால் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவல் படை (IRGC), ஈரானுக்கு அருகில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்களையும் இஸ்ரேலையும் அதிதீவிரமாகத் தாக்கியது. ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் (Strait of Hormuz) தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அமெரிக்காவிற்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. அலி கமேனியின் மறைவிற்குப் பிறகு, ஈரானின் உச்சத் தலைவராக முஜ்தபா கொமேனி பதவியேற்றார்.

1979-ல் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தனது இறையாண்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு வலிமையான தேசமாக ஈரான் உருவெடுத்துள்ளது. தனது எண்ணெய் வளம் மற்றும் புவிசார் அரசியலைப் பயன்படுத்தி உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக ஈரான் இன்றுவரை திகழ்கிறது.

தற்போது 2026-ல் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள், ஈரான் வரலாறு ஒரு புதிய மற்றும் சவாலான கட்டத்தை எட்டியுள்ளதைக் காட்டுகின்றன. ஹார்முஸ் நீர்ச்சந்தி போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலமும் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்தத் தேசம், தனது பாரசீக அடையாளத்துடனும் புதிய உத்திகளுடனும் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

ஈரான் வரலாறு: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஈரானின் பண்டைய காலப் பெயர் என்ன?

ஈரான் பண்டைய காலத்தில் பெர்சியா (Persia) அல்லது பாரசீகம் என்று அழைக்கப்பட்டது. 1935-ல்தான் ரெஸா ஷா பஹ்லவி அதிகாரப்பூர்வமாக ‘ஈரான்’ எனப் பெயர் மாற்றினார்.

1979 இஸ்லாமியப் புரட்சியின் முக்கிய நோக்கம் என்ன?

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த மன்னராட்சியைக் கவிழ்த்துவிட்டு, அயதுல்லா கொமேனி தலைமையில் ஒரு சுதந்திரமான இஸ்லாமியக் குடியரசை அமைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) ஏன் முக்கியமானது?

உலக எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% முதல் 30% வரை இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. இதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரான் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்.

ஈரானின் அணுசக்தி மையங்கள் எங்கு அமைந்துள்ளன?

ஈரானின் மிக முக்கியமான அணு ஆராய்ச்சி மையங்கள் நடான்ஸ் (Natanz) மற்றும் ஃபோர்டோ (Fordow) ஆகிய இடங்களில் நிலத்திற்கு அடியில் பாதுகாப்பாக அமைந்துள்ளன.

தற்போதைய ஈரானின் உச்சத் தலைவர் யார்?

2026-ல் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்குப் பிறகு, முஜ்தபா கொமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பதவியேற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles